ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வின் இந்திய விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார். பொதுநலவாய விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று இந்திய சென்றார்.
இவருடைய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை காந்திபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை ஆரிய வைத்திய பார்மசியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதில் திடீரென கலந்து கொண்டார்.
அப்போது உரையாற்றிய வைகோ, எனது உடல்நிலையை காரணம் காட்டி வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தினார்கள். அதையும் மீறி இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்துள்ளேன். இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எனது குரலை பதிவு செய்ய ஓடி வந்தேன். எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இவ்வாறான நிலை நீடிக்குமானால் தயவு செய்து ஒன்றே ஒன்றை மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். இதே நிலைமை நீடித்தால் தமிழகம் காஷ்மீராக மாறுவதை யாரும் தடுக்க முடியாது எனவும் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய வைகோவை, பொலிஸார் கைது செய்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து புதுச்சேரியில் ஆர்பாட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 104 பெண்களும், சேலத்தில் ஆர்பாட்டம் நடத்திய 15 மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
