சமூக ரீதியான புறக்கணிப்புக்கள் பாராபட்சங்களுக்கு இனிமேல் இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு செயற்படும் அரச நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இன்று பளைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அநீதிகள் இடம்பெறமாட்டாது. எப்பொழுதும் அக்கறையோடு இருப்போம். எல்லாவற்றுக்கும் நீங்கள் நம்பிக்கையோடு இருங்கள். நம்பிக்கைதான் உங்களை வழமைக்கும் திருப்பும். உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தொழிற்துறையை விருத்தி செய்யவும் பல தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து உங்களுக்கான உதவிகளைச் செய்து தருவதிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.
மேலும் நான் உங்கள் முன் நடைமுறைக்குச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசி வீர வசனங்களைக் கதைத்து விளம்பரங்களைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. எப்பொழுதும் நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களையும் வாக்குறுதிகளையும் பற்றித்தான் பேசுவேன். அதனை செய்தும் தருவேன். நூறுவீதம் உங்களுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யமுடியாது இருப்பினும் இயலுமானவரை அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் சேர்ந்து உங்களின் வாழ்க்கையை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
கண்ணிவெடி விடயத்தில் நிதானமாக செயற்பட வேண்டும். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு குறித்த நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர் நீங்கள் உங்களுடைய இடங்களுக்குப் பயமின்றிச் செல்லலாம். எனத் தெரிவித்தார்.
பளைப்பிரதேச செயலர் பிரிவில் பல்வேறு இடங்களில் மக்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள், மீள்குடியேற்றித்திற்காக புலோப்பளை மேற்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு கொண்டுவரப்பட்ட மக்களையும் சந்தித்தார். அத்தோடு பனை தென்னை அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்களையும் சந்தித்து அவர்களின் தேவைகளையும் கேட்டுக்கொண்டார்.
