சரத் பொன்சேகா மீதான வெள்ளைக் கொடி விவகார வழக்கு இன்றும் கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சரத் பொன்சேகாவின் வெள்ளைக் கொடி விவகாரம் தமது பத்திரிகையில் முதல் பதிவில் இடம்பெறாமை அவருக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தியிருக்காதென ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவின் சட்டத்தரணி எழுப்பிய குறுக்குக் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடி விவகாரத்தை தான் மூன்றாம் நபர்களின் ஊடாகத் தெரிந்துக் கொண்டதாக சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்தை தங்களுடைய பத்திரிகையின் நகரப் பதிப்பில் பிரசுரித்திருந்ததாகவும் பெட்ரிகா ஜேன்ஸ் கூறியுள்ளார்.
குறித்தத் தகவல்கள் சேர்க்கப்படும்வரை முதல் பதிவில் அதனை வெளியிட வேண்டாமென தான் ஊழியர்களுக்கு வாய்மூலம் அறிவித்திருந்ததாகவும், எனினும் அது அந்தத் தகவல் முதல் பதிப்பில் அச்சிடப்பட்டதாகவும் ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் நகர பதிப்பில் தான் அந்தத் தகவல்களை இணைத்து வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றை திசை திருப்பும் வகையில் பெட்ரிகா ஜேன்ஸ் பதிலளிப்பதாக சரத் பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி இதன்போது குற்றம் சுமத்தினார். எனினும் அந்தக் குற்றச்சாட்டை சாட்சியாளரான பெட்ரிகா ஜேன்ஸ் மறுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சண்டே லீடர் பத்திரிகை ஐக்கிய தேசிய கட்சியின் மலிக் சமரவிக்ரமவிடம் பணம் பெற்றுக் கொண்டதா என பொன்சேகா சார்பில் ஆஜரான சட்டத்தரணி கேள்வி எழுப்பினார். மலிக் சமரவிக்ரம மட்டுமல்ல கட்சியில் பலர் பணம் பெற்றதாக தான் கேள்விப்பட்டேன் என ஊடகவியலாளர் பெட்ரிகா ஜேன்ஸ் தெரிவித்துள்ளார்.
வழக்கு மீதான விசாரணை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
